சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.88 திருவீழிமிழலை
பண் - சீகாமரம்
நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
    நான்மறைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மடவாரணி
    பெற்ற திருமிழலை
உம்பரார்தொழு தேத்தமாமலை
    யாளொடும்முட னேஉறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
1
விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன்
    றிட்டுவிட்ட காதினீரென்று
திடங்கொள் சிந்தையினார்
    கலிகாக்குந் திருமிழலை
மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை
    வந்திழிச்சிய வானநாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
2
ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி
    மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர்
    செழுமாடத் திருமிழலை
மானைமேவிய கையினீர்மழு
    வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
3
பந்தம்வீடிவை பண்ணினீர்படி
    றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று
சிந்தை செய்திருக்குஞ்
    செங்கையாளர் திருமிழலை
வந்துநாடகம் வானநாடியர்
    ஆடமாலயன் ஏத்தநாடொறும்
அந்தண் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
4
புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில்
    லேந்திவேதப் புரவித்தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர்
    சிறந்தேத்துந் திருமிழலைப்
பரிசினாலடி போற்றும்பத்தர்கள்
    பாடியாடப் பரிந்துநல்கினீர்
அரிய வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
5
எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன்
    ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்
செறிந்த பூம்பொழில்
    தேன்துளிவீசுந் திருமிழலை
நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும்
    நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
6
பணிந்தபார்த்தன் பகீரதன்பல
    பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ்
    செல்வம்மல்கு திருமிழலை
தணிந்தஅந்தணர் சந்திநாடொறும்
    அந்திவானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
7
பரந்தபாரிடம் ஊரிடைப்பலி
    பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறை
    யோர்க்கிடமாய திருமிழலை
இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும்
    இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
8
தூயநீரமு தாயவாறது
    சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர்
தீயராக் குலையாளர்
    செழுமாடத் திருமிழலை
மேயநீர்பலி ஏற்றதென்னென்று
    விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுதிரே.
9
வேதவேதியர் வேதநீதியர்
    ஓதுவார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர்
    அடியேற்கும் அருளுகென்று
நாதகீதம்வண் டோதுவார்பொழில்
    நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
பாதம் ஓதவல்லார்
    பரனோடு கூடுவரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com